search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி,மின்னலுடன் பெய்த கனமழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் 2½ அடி உயர்வு
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி,மின்னலுடன் பெய்த கனமழை - சேர்வலாறு அணை நீர்மட்டம் 2½ அடி உயர்வு

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டம் மற்றும் மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கிய நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலமாக பெய்தது. ஒரு சில இடங்களில் பயங்கர மான இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    மாநகரில் புதிய பஸ் நிலையம், பாளை, சமாதானபுரம், டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், கே.டி.சி.நகர், சந்திப்பு, பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான தெருக்கள் சேறும் சகதியுமாக நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் இருந்தது. ஒரு சில தெருக்களில் மழைநீர் இன்று காலை வரையிலும் தேங்கி கிடந்தது.

    அணைகள் நிலவரம்

    மாவட்டத்திலும் மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 60 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 59.6 மில்லிமீட்டரும், அம்பையில் 45 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 43 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 85.35 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 1/2 அடி உயர்ந்து 98.85 அடியானது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 922.64 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 404 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. மணிமுத்தாறில் 32 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணைியல் 56.75 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாஞ்சோலை வனப்பகுதியில் விடியவிடிய கனமழை கொட்டியது. மாஞ்சோலை எஸ்டேட்டில் 7.2 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 5.2 சென்டி மீட்டரும் மழை பெய்தது. ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. செங்கோட்டையில் 60 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஆய்குடியில் 46 மில்லிமீட்டரும், சிவகிரியில் 27 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்த வரை நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பா நதியில் 30 மில்லிமீட்டரும், குண்டாறில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தி லும் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் ஒரு சில இடங்களில் இன்று காலையிலும் மழை தொடர்கிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் இடி-மின்னலு டன் மழை பெய்தது. அதி கபட்சமாக திருச்செந்தூரில் 66 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஓட்டப்பிடா ரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் பெய்த மழையால் விவசாயி கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம், எட்டய புரம், கோவில்பட்டி, விளாத்தி குளத்திலும் பரவலாக மழை பெய்தது. காடல்குடியில் 54 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்து வரும் மழையால் தாழ்வான தெருக்க ளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    Next Story
    ×