என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கடும் பனிப்பொழிவு

- நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
- கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (சனி) அதிகாலை முதல் கடுமையான பனி பொழிவு காரணமாக சாலையில் எதிரே நடந்து செல்பவர்களை கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
மேக மூட்டம் போல பனியானது சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்து பனி பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த பனி பொழிவானது, காலை 8 மணியை கடந்தும் சற்றும் குறையவில்லை. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. பெரும்பாலான வாகனங்கள் பனி பொழிவு காரணமாக விபத்தை தவிர்க்கும் பொருட்டு சர்வீஸ் சாலையில் சென்றதால் போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இது தவிர கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் கடும் பனி பொழிவு காரணமாக புறநகர் ரெயில் பயணிகள் ரெயில்களின் வருகையை கூட தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது விரைவு ரெயில்கள் அப்பகுதியில் செல்கின்றதா? என்பதை கூட அறிய முடியாத நிலை நீடித்தது. கடந்த சில நாட்ளை விட இன்றைய தினம் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.