என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மையங்களுக்கு அதிவேக இண்டர்நெட் வசதி
- இ-சேவை மையங்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன பொது இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலர் நிராஜ்மிட்டல் தலைமையில், மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இ-பைலிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், கிராமப்புற பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது முதன்மை செயலர் நிராஜ்மிட்டல் பேசியதாவது:-
மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் கடிதங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, துறைவாரியாக வழங்கும் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். வரும் அனைத்து தபால்களையும், ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
இதன் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை அனுப்பிட வேண்டும். தபால்களை ஸ்கேன் செய்ய தேவையான ஸ்கேனர்களை கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். இப்பதிவேற்றத்திற்கு கணினியில் வின்டோஸ்-7 சாப்ட்வேர் இருந்தால் போதுமானது.
மேலும் 4ஜிபி ரேம் பொருத்தப்பட வேண்டும். குறைவான திறன் கொண்ட கணினிகளை மேம்படுத்திட வேண்டும். இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். செயல்படாமல் உள்ள இ-சேவை மையங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைப்படும் பல்வேறு பகுதிகளில் புதிய இ-சேவை மையங்களை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
முன்னதாக, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் வட்டார அளவில் அதிவேக இணைய சேவை வழங்க அமைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள் கட்டுப்பாட்டு மையத்தினை பார்வையிட்டார். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன பொது இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர்பிரபு, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.