என் மலர்
உள்ளூர் செய்திகள்
குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர்
- இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும்.
- இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பெரம்பட்டு பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 40). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமையல் வேலை செய்யும் முருகன் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும். அக்கம்பக்கத்தினர் முருகனை சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சமையல் வேலைக்கு சென்ற முருகன், வேலை முடித்து நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் மது குடித்து முழு போதையில் வீட்டிற்கு வந்ததை பார்த்த ரேவதி, இதனை கண்டித்துள்ளார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்தால் அவர்களை எவ்வாறு கரை சேர்ப்பது என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படடு, முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் சென்று மீண்டும் குடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார். மீண்டும் குடித்துவிட்டு கணவன் வந்ததை கண்ட ரேவதி மேலும் ஆத்திரமடைந்தார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால், ரேவதியை முருகன் தாக்கினார். மேலும், சமையல் பணியில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ரேவதியின் கழுத்தினை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர். சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம்பக்கத்தினர் ரேவதியை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த அண்ணாமலை நகர் இனஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பதை கண்டித்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல கணவன் முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.