என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்களுக்கு 3 விதமான பிரசாதம் வழங்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
- நாமக்கலில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளன.
- ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் 3 விதமான பிரசாதம் நாள் முழுவதும் பக்தர்களுக்கு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே பல பெரிய கோவில்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாமக்கலில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நரசிம்ம சாமி கோவிலில் நேற்று முதல் தினமும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொளி காட்சி மூலம் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நரசிம்ம சாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் தான் ஆஞ்சநேயர் கோவில் வருகிறது. கோவிலுக்கு தினமும் வந்து செல்லும் பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்படும். மேலும் ஆஞ்சநேயருக்கு கட்டளைதாரர்கள் மூலம் தினமும் வடமாலை சாத்துபடி செய்யப்படுகிறது. இந்த பூஜையின் போது கட்டளைதாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான கட்டளை–தாரர்கள் பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதேபோல் ஆஞ்சநேயருக்கு உகந்த நாட்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு உத்தரவுபடி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் 3 விதமான பிரசாதம் நாள் முழுவதும் பக்தர்களுக்கு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக நரசிம்ம சாமி கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளி அருகில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு தினமும் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.
தினமும் அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் 10 மணி வரை வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படு–கிறது. பின்னர் 10 மணிக்கு மேல் மதியம் நடை அடைக்கபடும் வரை புளியோதரை பிரசாதமாக அளிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கும் போது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.
இரவு கோவில் நடை அடைக்கப்படும் வரை பக்தர்கள் சர்க்கரைப் பொங்கல் பெற்று செல்லலாம். தினமும் சராசரியாக 400 முதல் 500 பேருக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமை–களில் பக்தர்களுக்கு புளியோதரையுடன் வடையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.