என் மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், தே.மு.தி.க உண்ணாவிரத போராட்டம்
- காவிரி நீர் பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று தே.மு.தி.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கருகிய குறுவை பயிர்களை கண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போராட்டம் தொடங்கி நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளர் கரம்பை சிவா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது உடனடியாக காவிரி நீர் பெற்று குறுவைப் பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.