என் மலர்
உள்ளூர் செய்திகள்
விருத்தாசலத்தில் இன்று தொட்டி உடைந்து வீணாக வெளியேறிய குடிநீர்
- காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.
- பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வினியோகத்திற்காக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பங்களா தெரு, புதுப்பேட்டை, காட்டுகூடலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்க தொட்டியின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இன்று காலை குடிநீர் விநியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டியை திறக்க முற்படும்போது ஏற்பட்ட பழுதின் காரணமாக இரும்புக் குழாய் உடைந்து தொட்டியிலுருந்து தண்ணீர் கொட்ட தொடங்கியது. அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள் குழாயை சரி செய்ய முற்பட்டனர். ஆனால் மேலும் அந்த இரும்பு குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வெளியேறத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட திடீர் நீர்பெருக்கம் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் தண்ணீர் ஓட தொடங்கியது. காய்கறி வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகள் தண்ணீரில் மிதக்க தொடங்கின.
அதிர்ச்சி அடைந்த காய்கறி வியாபாரிகள் தங்களது காய்கறிகளை வேறு இடத்தில் எடுத்து வைக்க முயற்சி செய்வதற்குள் நீர் அதிவேகமாக வெள்ளம் போல ஓட தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீர்த்தேக்க தொட்டியிலிருந்த நீர் காலியாகும் வரை சாலையில் வீணாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் தினசரி மார்க்கெட் வளாகம் மற்றும் காட்டுக்கூடலூர் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.