என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக தினந்தோறும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
- கேரளா, கர்நாடகாவில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் சுற்றுலா வந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் இயற்கை அழகுடன் கூடிய வனப்பகுதியையும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும்.
இங்கு நிலவும் சிதோஷ்ண நிலை, சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக தினந்தோறும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
அப்படி வருபவர்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரெயில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். மேலும் இயற்கை அழகுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது சமவெளி பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக பலரும் குளுமையான பிரதேசமான நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் 2 நாட்களாக ஊட்டி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.இதில் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் சுற்றுலா வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானத்தில் அங்கும், மிங்கும் ஒடி ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.
இதுதவிர பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்துள்ளனர்.
அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற பகுதிளை சுற்றி பார்த்து வருகின்றனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர்-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, மலை உச்சியில் இருந்தபடி இயற்கை அழகினை கண்டு ரசிக்கின்றனர்.