என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் கடும் அவதி
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலத்தில்...
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் சராசரியாக 97, 98, 99 டிகிரி என்ற அளவில் வெயில் பதிவாகிறது.
இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலை மற்றும் முகத்தில் வெயில் படாதபடி துணியை போர்த்தி பயணிக்கின்றனர்.
மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இதனால் கடை வீதிகள், சந்தைகளில் மக்கன் நடமாட்டம் குறைந்துள்ளது.
குளிர்ச்சியான பானங்கள்...
வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி, சர்பத், கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.
இதனால் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பு
தற்போது பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டில், அந்த 2 நாட்களும் முகாமிட்டு, குளிர்ந்த காற்று மற்றும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கின்றனர். அங்கு 2 நாட்களும் மகிழ்ச்சியுடன் இயற்கையை ரசித்து விட்டு மாலையில் வீடு திரும்புகின்றனர்.
டாக்டர்கள் அறிவுரை
பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுக்கு வெப்ப அலர்சியும் ஏற்படுகிறது.
வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடு மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு உடலில் உள்ள வெப்ப நிலை அதிகரிக்காமல் சீராக வைத்திருப்பதற்கு இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட ஆரோக்கியமான பானங்களை கொடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.