என் மலர்
கள்ளக்குறிச்சி
- முதலமைச்சர் குறித்து தரக்குறைவாக பேசிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- தி.மு.க.வை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் புகார் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நேற்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் குறித்தும் குமரகுரு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வினர் நள்ளிரவில் குமரகுருவை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
சின்னசேலத்தில் ஒன்றிய குழுதலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் தி.மு.க.வை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் புகார் மனு அளித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வெளியே கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் குமரகுருவை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் குமரகுரு மீது 5 பிரிவுகளில் வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.
- சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மயான பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கருப்பன்(வயது24), குரு(26), கணபதி (28), பிரபாகரன் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.120 பறிமுதல் செய்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 62). இவர் அமுல்யா, ஜெயபாண்டியன், நாராயணன் ஆகியோருடன் சபரிமலைக்கு காரில் சென்றார். இந்த காரினை சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஓட்டிச் சென்றார்.
சாமி தரிசனம் செய்து விட்டு புதுவைக்கு திரும்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலை வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது.
இதில் தியாகராஜனுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
- சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.
கள்ளகுறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
கள்ளகுறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா மரூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், பின் முதற்கால யாக பூஜை, விசேஷ திவ்யஹோமம், அதைத்தொடர்ந்து இரவு பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின் இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ஸாபர்சாஹீதி, காலை 9 மணிக்கு மஹா பூர்ணா ஹீதி, மஹா தீபராதனை நடந்தது.
காலை 9.30 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பகண்டைக் கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45), சுப்பராயன் மனைவி வீரம்மாள் (65) ஆகியோர் தனித்தனியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இளையனார்குப்பத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா(42) என்பவரையும் போலீசார் கைதுெ செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி :
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44). விவசாயி, இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத் தன்று தனது விவசாய நிலத்துக்குச் சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். இதுகுறித்து அவரது தம்பி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திருமணங்களை முன்னிட்டு அனைத்து திருமண நிலையங்களிலும் நேற்று மாலை தனித்தனியே பெண் அழைப்பு நடைபெற்றது.
- ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
புரட்டாசி மாதம் நாளை தொடங்குகிறது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது. அதற்கடுத்த மாதம் ஐப்பசியில் அடைமழை பெய்யும் என்பதாலும், மிகவும் குறைந்த அளவிலேயே சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதற்கடுத்து மார்கழி மாதம் என்பதால் அந்த மாதத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறாது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. அதன்படி உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து திருமண நிலையங்களையும், மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே முன்பதிவு செய்தனர். திருமணங்களை முன்னிட்டு அனைத்து திருமண நிலையங்களிலும் நேற்று மாலை தனித்தனியே பெண் அழைப்பு நடைபெற்றது. பெண் அழைப்பு முடிந்தவுடன் வரவேற்பு நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை திருமணம் நடைபெற இருந்த 2 மணப்பெண்கள் தனித்தனியே மாயமாகினர். அவர்களது செல்போன்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மணப்பெண்ணின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். இத்தகவல் படிப்படியாக திருமண மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் தெரியவந்தது. இதனை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே சமயம் 2 மணப்பெண்கள் மாயமான திருமண நிலையங்களில் அவர்களது பெற்றோர் சொல்லனாத் துயரத்தில் அழுது கொண்டே இருந்தனர். திருமணம் நின்று போன சோகத்தில் மணமகனும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். இதேபோல உளுந்தூ ர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று திருமணம் நிச்சயி க்கப்பட்ட 5 இளம்பெண்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்னரே மாயமாகினர். இந்த சம்பவங்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகவும் செல்லமாக வளர்க்கின்றனர். அவர்களுக்கு குடும்ப சூழல் குறித்து எடுத்து சொல்லி பெற்றோர்கள் வளர்த்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காதென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
- 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டில் நேற்று முன்தினம் இரவு தெருகூத்து நடைபெற்றது. இதைபார்த்து கொண்டிருந்த 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயது சிறுவன் 14 வயது சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த 14 வயது சிறுவன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாணாபுரம் அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
- இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அன்பரசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். மாலை வெகுநேரமாகியும் அன்பரசன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள ஓடையில் அன்பரசன் பிணமாக மிதந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கை, கால்களை கழுவுவதற்காக ஓடைக்கு அன்பரசன் சென்றதும், எதிர்பாராத விதமாக அவர் ஓடைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது விருகாவூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷ் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எஸ்.ஒகையூர் கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சில நிலங்களில் பயிறு இருந்ததால் அந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.
இதனால் தங்கள் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல் அனைத்து நிலத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜா, கொடியரசு, பிச்சப்பிள்ளை, பொன்னுசாமி உள்ளிட்ட 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மற்றும் சிலர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எஸ்.ஒகையூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 17 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி, செப்.16-
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்தி ட டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்ட ரிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார். பின்னர், மாணவ ர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாண வர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.