என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதல்
- மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். இவருடன் அவரது சகோதரியும் பஸ்சில் வந்து செல்வார்.
சகோதரி நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக பாராமெடிக்கல் கல்லூரி மாணவன் தங்கையை காதலித்து வந்த வாலிபரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவியை காதலித்த வாலிபருக்கு ஆதரவாக பேசினார். இதனால் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதில் நர்சிங் கல்லூரி மாணவரை மற்ற 3 மாணவர்கள் சாவியாலும் குத்தினார்கள். சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.