என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
- வாலிபர் தொல்லை கொடுப்பதாக புகார்
- போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமையான இன்று பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர். மனு அளிக்க வந்தவர்களை போலீசார் சோதனைக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வந்தனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் வினி (வயது 45) .இவர் தனது மகன் மற்றும் மகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணெய் கேனை கையில் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த ஊழியர் ஒருவர் தீப்பெட்டியை தட்டி விடவே அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை உடனடியாக வந்து பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்தப் பெண் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் வாங்கிய பணத்தை திரும்பி கொடுத்த பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரின் உடமைகளையும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.