என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேர்தல்-வாக்கு அரசியலுக்காக சனாதனம் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளனர்
- நாகர்கோவிலில் விடியல் சேகர் பேட்டி
- மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
நாகர்கோவில் :
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் இன்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சையை தொடங்கி உள்ளார். இந்தியாவும், தமிழகமும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு திகழ்கிறது. ஆனால் தேர்தல், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மை மக்களை குறி வைத்து உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார். இது தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. சிறைகளில் கூட கஞ்சா, செல்போன்கள் தாராளமாக கிடைக்கிறது. போதை பொருட்கள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. உளவுத்துறை போலீசார் அதை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். உளவுத்துறை செயல் இழந்து காணப்படுகிறது. சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் சென்ற வாகனமே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இது அரசின் நிர்வாக திறமை சீர்கேட்டை காட்டுகிறது.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவு கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளின் சான்றிதழ்களை வேளாண் துறை அதிகாரிகள் அனுப்பாமல் உள்ளனர். இதனால் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியாமல் உள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, மெட்ராஸ் ஐ பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் அமையும்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியுடன் த.மா.க. உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா, பாரதம் என்பது ஒரே வார்த்தை தான். இதை அரசியலாக வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.