என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒடிசா கவர்னர் சாமி தரிசனம்
கன்னியாகுமரி :
ஒடிசா மாநில கவர்னர் கணேஷிலால் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு 6 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்த அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி வரவேற்றார்.
மாலை 4 மணியுடன் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஒடிசா கவர்னர் படகுமூலம் சென்று நேரடியாக பார்க்க முடியவில்லை.
இதனால் படகுதுறையில் போடப்பட்டு இருந்த விசேஷ நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவர் சுமார் ½ மணி நேரம் பார்த்து ரசித்தார். அதன்பிறகு இரவு 7 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த அவரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் மற்றும் சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு இரவு 8 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பி சென்றார். இரவு அங்கு தங்கினார். 2-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பிறகு காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனி படகு மூலம் சென்று பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு சென்றார். ஒடிசா கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.