என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடுக்கரை, சிறமடம், திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன்புதூர், தேரூர், பறக்கை, கிருஷ்ணன்கோவில் மற்றும் திங்கள்நகர் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதனை தனியார் அரிசி ஆலையினர் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். 1 கோட்டை (87 கிலோ) நெல் ரூ. 1,550 முதல் ரூ. 1,670 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதிகளில் தொடங்கி இருந்தால் 1 கோட்டை நெல் ரூ. 1,840 வரை கிடைத்திருக்கும் தனியாருக்கு கொடுப்பதில் இருந்து ரூ. 200 வரை கூடுதலாக கிடைத்திருக்கும். இதனால் விவசாயிகள் பயனடைந்து இருப்பார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கன்னிப்பூ அறுவடையில் விவசாயிகள் அதிக மகசூல் எதிர்பார்ப்பதால், வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 60 மூடை நெல் கொள்முதல் செய்வதை உயர்த்தி 70 மூடை வரை நெல் கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.