என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்.கலெக்டர் அலுவலகம் முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்;50 பேர் கைது - மனித நேய ஜனநாயக கட்சியினரும் பங்கேற்பு
- அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 30-ந் தேதி நடைபெறும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2,500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்கள் அனைவரும் தாங்கள் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்துக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர்.
ரப்பர் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக 40 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அரசு ரப்பர் கழக நிர்வாகம் 40 ரூபாய் சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். ஆனால் போராட்டம் அறிவிக்கப்பட்டதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.