என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் விடுதி மாணவர்களுக்கு சுற்றுலா விழிப்புணர்வு வாகனம்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடற்கரை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சமூக பாதுகாப்புத்துறை மற்றும் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்பட்டுவரும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதற்கான 3 சுற்றுலா விழிப்புணர்வு வாகனங்கள் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 16 மாணவ, மாணவியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 30 மாணவ, மாணவியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுலா வாகனத்தில் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுபாப்பு அலகு அலுவலர் (பொ) பியூலா மற்றும் பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.