என் மலர்
கன்னியாகுமரி
- ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
- யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் யானையின் உரிமையாளர் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் யானைக்கு தென்னை ஓலை மற்றும் அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதியினர் அருமனை போலீசுக்கும், களியல் வனச்சரகத்துக்கும் தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனச்சரக அலுவலர் அப்துல் காதர் முகைதீனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையின் உரிமையாளருக்கு தகவல் தொிவித்து அவரும் வரவழைக்கப்பட்டார்.
இதையடுத்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்து தெளிந்த பாகனை கீழே இறக்கினார்கள். இதையடுத்து வனத்துறையினரும், யானை உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாகனை விட்டுவிட்டு யானை வாகனத்தில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து யானையை அண்டுகோடு பகுதியில் இருந்து அருமனை வழியாக திற்பரப்புக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் யானையும் பாகனும் முன்னே நடந்து செல்ல வனத்துறையினரும், உரிமையாளரும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக யானையை திற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்.
- படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் பெய்த மழையின் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தும் காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதனால் படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையின் காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து உள்ளது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழை காரணமாக கன்னியாகுமரி கடற்கரை மட்டும் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
- தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
- தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
நேற்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.
அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
தமிழக மக்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர், தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த கூட்டம் அதிகமாக உள்ளது.
அதன்படி இன்று கன்னியாகுமரியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டனர். அதன் பிறகு அங்குள்ள கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றும் மகிழ்ந்தனர்.
மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.
- விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்த்து மகிழ்ந்தனர்.
- கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
கன்னியாகுமரி:
வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதன்படி வார இறுதி விடுமுறை நாளான இன்று கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக சுமார் 2 மணி நேரம் படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய நிலையில் அவர்கள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்த்து மகிழ்ந்தனர். கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம்அடைகின்றனர்.
மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும்.
- தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சனையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். 3-வதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியை தந்தார். ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தற்போது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர், அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது? என்று பார்க்க வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்று தான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை தி.மு.க. அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலை தான் தற்பொழுது உள்ளது. குழந்தைகளின் கல்வியில் விளையாடக் கூடாது.
மத்திய அரசு எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறதோ அந்த திட்டத்திற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். வேறு திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவரிடம் கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒரு அமைச்சர் இப்படி கூறக்கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
துணை முதலமைச்சர் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு அதிக இடத்தை முதல்வர் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் புகைப்படங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதலமைச்சர் புகைப்படங்களும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் 2 படங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் மோடியின் படம் தான் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும். மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. கொடுப்பவர் படம் இல்லை. விநியோகம் செய்பவரின் படம் மட்டும் ரேஷன் கடைகளில் உள்ளது. தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக்கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை சீசனையொட்டியும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
- கோடை வெயிலின் தாக்கத்தினாலும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணி வருகை அடியோடு நின்றுபோய் விட்டது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டியும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை சீசனையொட்டியும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இது தவிர பண்டிகை விடுமுறை காலங்களிலும் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதாலும், கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணி வருகை அடியோடு நின்றுபோய் விட்டது. குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் கன்னியாகுமரியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மற்றும் கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சுற்றுலா தலங்களும் ஆட்கள் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்படுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு 2 படகு மட்டுமே அவ்வப்போதும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காலை நேரத்திலும் சூரியன் மறையும் மாலை நேரத்திலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.
- கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை.
- பணிகள் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
நெல்லை:
தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது.
இதில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் சிக்னல்களில் பலமணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டியிருந்ததால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில், கனவு திட்டமான சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இரட்டை ரெயில்பாதை திட்டத்தை பயணிகள் மிகவும் எதிர்பார்த்தனர்.
இதில் சென்னையில் தொடங்கி மதுரை வரையிலும் கடந்த 2021-ம் ஆண்டு இரட்டை ரெயில் பாதை பணி முடிக்கப்பட்டு சேவைகள் நடைபெற்று வந்தது. எனினும் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டித்தரும் மதுரை, நெல்லை, குமரி ரெயில் வழித்தடங்கள் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்படாமல் இருந்த வந்தது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
அடுத்த கட்டமாக மதுரை-நெல்லை-நாகர்கோவில்-குமரி இடையே இரட்டை பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டுக்கு முடிக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால் கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக சற்று பணிகள் தாமதமாகி கடந்த ஆண்டு அக்டோபரில் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது சென்னையில் இருந்து குமரி வரை இரட்டை ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் மூலம் தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில், இரட்டை ரெயில் பாதை திட்டம் பயன்பாட்டுக்கு வந்ததால் இனி கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் விரைவு ரெயில்கள் போதுமானதாக இல்லை. பயணிகளுக்கான ரெயில்களை அதிகமாக இயக்க வேண்டும்.
இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து 5 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படாதது பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை காலக்கட்டங்கள், விடுமுறை காலகட்டங்களில் வழக்கமான ரெயில்களை தவிர தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டாலும் அவையும் 5 நிமிடங்களில் நிரம்பி விடுகிறது.
தற்போது இரட்டை ரெயில் பாதை அமைந்த பின்னர் ரெயில்களின் பயண நேரம் குறைந்துவிட்டது. இது மகிழ்ச்சி தான் என்றாலும், கூடுதலாக விரைவு ரெயில்களை இயக்கினால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும்.
பெரும்பாலான ரெயில் நிலையங்களில் அழகுப்படுத்தும் பணிகளை மத்திய ரெயில்வே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக நடைமேடைகள் அமைப்பது, கூடுதல் பணிமனைகள், கூடுதல் இணைப்பு ரெயில் பாதைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரெயில்வே கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துள்ளதால் விரைவு ரெயில்களின் பயண நேரம் 20 நிமிடம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது பயண நேரம் மேலும் குறையும்.
நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில் சிக்கல் இருக்கிறது. பணிகள் முடிந்ததும் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- பணிகள் தொடங்கிய போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
- பணிகளை துரிதப்படுத்தி இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே துறை சம்மந்தமான பல்வேறு திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை உணர்ந்து பாராளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்து, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரெயில்வே பாலங்கள் போன்ற இந்த பணிகள் தொடங்கிய போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்தி இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அவர்களை சந்தித்து கேட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
- அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
- ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.
அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.
ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.
- 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
- கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர். பெரியவர்கள் மட்டு மின்றி குழந்தைகளும் ஏராளமானோர் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். இதை யடுத்து 12 சிவாலயங்களிலும் கூட்டம் அலைமோதியது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வழிநெடு கிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 12 சிவாலயங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.
அனைத்து சிவாலயங்க ளிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடைபெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பக்தர்கள் இரவில் பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஓட்டி அனுப்பினார்கள்.
சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித் தது.
இன்று காலையில் நிர்மால்ய தரிசனமும், 10 மணிக்கு நறுமண பொருட் களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்பா ளும் திருத்தேரில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோல் வடசேரி தழுவிய மகாதேவர் கோவில், சோழராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.