search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரிகள் முழுவதும் நிரம்பியதால் கிருஷ்ணா நீர் பெறுவது நிறுத்தம்
    X

    ஏரிகள் முழுவதும் நிரம்பியதால் கிருஷ்ணா நீர் பெறுவது நிறுத்தம்

    • புதிதாக தடுப்பணைகள் கட்டஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. என மொத்தம் 12 டி. எம். சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த செப்டம்பர் 22 -ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதற்கிடையே புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. ஏரியின் பாதுகாப்பை கருதி கடந்த மாதம் 12-ந்தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து உபரி நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதும் உபரி நீர் இப்படி வீணாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆனால் கோடை காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

    கொசஸ்தலை ஆற்றின் மீது ஆற்றம்பாக்கம், திருக்கண்டலம், அணைக்கட்டு பகுதிகளில் தடுப்பு அணைகள் உள்ளன. மேலும் கூடுதல் தடுப்பணைகள் கட்டினால் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு புதிதாக தடுப்பணைகள் கட்டஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தற்போது பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 3124 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு வரும் 1000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரிநீராக கொசஸ்தலை ஆற்றில் திறந்த விடப்படுகிறது. வழக்கமாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது பூண்டி ஏரி நிரம்பி உள்ள நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் தண்ணீரை திறந்து விட முடியாத நிலை உள்ளது. எனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை தண்ணீர் பெறுவதை தற்போது நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 20.16 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 23.25 அடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×