என் மலர்
உள்ளூர் செய்திகள்
பராமரிப்பு இல்லாததால் லெப்பையன் குளம் உடையும் அபாயம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகும் அச்சம்
- கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் சிறுமலை பகுதியில் இருந்து இரண்டலபாறை, நல்லாம்பட்டி குளம் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.
- இந்த நிலையில் கரைகள் பலகீனமாக இருப்பதால் குளத்தின் கரை உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி அருகே லெப்பையன் குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் சிறுமலை பகுதியில் இருந்து இரண்டலபாறை, நல்லாம்பட்டி குளம் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.
இதன்காரணமாக குளத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் குளம் நிரம்பி உள்ளது.இந்த நிலையில் கரைகள் பலகீனமாக இருப்பதால் குளத்தின் கரை உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மாதவன் கூறுகையில், பல ஆண்டுகளாக பர்மாகாலனி, பெருமாள் கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டு குளத்தை சுற்றி பேவர் கற்கள் பதித்து நடைமேடை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ெபய்த பலத்த மழையால் இந்த லெப்பையன் குளத்தில் தண்ணீர் நிரம்பி உடையும் அபாயம் உள்ளது.
இந்தக் குளம் உடைந்தால் குளத்தின் அருகே உள்ள வேடப்பட்டி, குருநகர், ராஜலட்சுமி நகர் பர்மா காலனி, பெருமாள் கோவில் பட்டி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் பலத்த மழை வருவதற்கு முன்பாக லெப்பையன் குளத்தை ஆய்வு செய்து குளத்தின் கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.