என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டி
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நெல்லையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது.
- 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆச்சிமடம் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நெல்லையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது. பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இந்த போட்டியை கலெக்டர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஆண், பெண் இருபாலருக்குமான போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 கிலோமீட்டர் தூரமும், பெண்கள் 5 கிலோமீட்டர் தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கிலோமீட்டர் தூரமும், பெண்கள் 5 கிலோமீட்டர் தூரமும் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது.
தொடர்ந்து 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆச்சிமடம் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.
பெண்கள் 5 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செந்தூர் சாலையில் உள்ள சீனிவாச நகர் வரை சென்று திரும்பினர். மற்றொரு பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து கிருஷ்ணாபுரம் வரை 10 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தனர்.
இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர். போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த போட்டியை தொடர்ந்து அண்ணா விளையாட்டு மைதானம் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரையிலும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.