என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது
- ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.
மதுரை
மதுரை மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் கொள்ளை யடிப்பதற்காக, ஆயுதங்க ளுடன் ஊடுருவி இருப்பதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை கீரைத்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள்.
இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்தனர். அப்போது அவர்கள் அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி மற்றும் கயிறு ஆகியவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் பிடிபட்ட 2 பேரையும், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிந்தாமணி கண்ணன் காலனி, சோலைமாரி மகன் திருக்குமார் என்ற கோழி குமார் (வயது 19), மேலதோப்பு, தாயுமானவசாமி நகர், நிறைகுளத்தான் மகன் சதீஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. கோழிகுமார் மீது கீரைத்துறை போலீசில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சதீஷ்குமார் மதுரை மட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டத்திலும் மேலத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்புடையவன். அவன் மீது கோவிலாங்குளம் போலீஸ் சரகம் உள்பட மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் பிடிபட்ட 2 பேரும் மதுரை மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.