என் மலர்
உள்ளூர் செய்திகள்
விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பேட்டி
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை கமிஷன் அறிக்கையை முழுவதுமாக வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பேட்டியளித்துள்ளார்.
- பொதுமக்களை குருவிகளை போல சுட்டு தள்ளி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையம் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. தமிழகத்தில் ஒரே இடத்தில் நடந்த முதல் கொடூர சம்பவம் இது. தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 'பந்த்' நடத்தியது.
அப்போது எடப்பாடி பழனிசாமி 'தொலைக்காட்சியை பார்த்து தான் துப்பாக்கி சூட்டை தெரிந்து கொண்டேன்' என்று கிண்டல் செய்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான கமிஷன், 3 ஆண்டுகள் விசாரணை நடத்தி, 3 ஆயிரம் பக்க அறிக்கையை, தமிழக அரசிடம் சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் அதன் ஒரு பகுதி இப்போது வெளியே வந்துள்ளது. அதன்படி, 'மறைவிடத்தில் இருந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். பொதுமக்கள் ஓடும்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. கண்ணீர் புகைகுண்டு வீச்சு உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை அம்சங்கள் எடுக்கப்படவில்லை.
பொதுமக்களை குருவிகளை போல சுட்டு தள்ளி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தோம். இதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் 'துப்பாக்கி சூடுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மட்டுமே துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பு' என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது முழுக்க முழுக்க மோசடித்தனமானது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு அப்போதைய உள்துறை தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய முழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் வெங்கடேசன் எம்.பி. உடன் இருந்தார்.