search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பது எப்போது?
    X

    மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பது எப்போது?

    • கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

    மதுரை

    சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

    இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3- ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை புது நத்தம், ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, பகலாக பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நூலக கட்டிடம் 90 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. சுமார் 7 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் 3 மாடிகள் உயரத்திற்கு அதன் முகப்பில் கண்ணாடி முகப்பு ஏற்படுத்தப்படுகிறது.

    இது தவிர நூலகத்தில் டிஜிட்டல் திரைகள், சிற்றுண்டி கூடங்கள், 100 கார்கள், 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைகிறது. 3 இடங்களில் எஸ்கலேட்டர்கள் (நகர்வு படிகள்) அமைக்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் செல்ல தனி பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் கலைஞர் நூலகம் ஜனவரி மாதம் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    நூலகத்திற்கு தேவையான தமிழ் மொழி, ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, தொடர்பான 12 ஆயிரம் அரிய நூல்கள்உள்ளிட்ட2.50 லட்சம் புத்தகங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான புத்தகங்களும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படுகிறது.

    மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

    Next Story
    ×