என் மலர்
உள்ளூர் செய்திகள்
சித்திரை திருவிழாவை குளிர வைத்த மழை
- சித்திரை திருவிழாவை குளிர வைத்த மழையால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
- மழையை பொருட்படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.
மதுரை
மதுரையில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்தது. கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் 100 டிகிரியை தாண்டி பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பகல் முழுவதும் கொளுத்திய வெயிலால் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று, புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. வழக்கமாக ஆழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று மதுரையில் மழை பெய்யும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அதன்படி கடந்த காலங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது மழை பெய்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலை தணிக்க மழை பெய்யும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர். சித்திரை திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை மதுரை நகர் முழுவதும் மழை அடித்து கொட்டியது. ஒரு மணிநேரத்திற்கும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் மதுரை நகரில் அதுவரை நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தொடர்ந்து விழா தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை மாலை நேரங்களில் அவ்வப்போது கன மழை முதல் தூரல் மழை பெய்தது.
இதனால் கோடை என்பதையே மக்கள் மறந்து போகும் அளவுக்கும் மழை இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து பகல் நேரங்களில் மேக மூட்டத்துடனும் காணப் பட்டது.
ஆனால் சுவாமி- அம்பாள் வீதி உலா மற்றும் முக்கிய திருவிழா நிகழ்ச்சி கள் மழையால் தடை படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் மழையை பொருட் படுத்தாமல் வழக்க மாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் திரண்டதை காணமுடிந்தது.