என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாத்தியார் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மீது அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் மலர் தூவினர்.
பாசனத்துக்காக சாத்தியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

- பாலமேடு அருகே பாசனத்துக்காக சாத்தியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- இந்த அணைக்கு சுமார் 340 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையின் கொள்ளளவு 29 அடி ஆகும். இந்த அணைப்பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அணை முழுவதுமாக நிரம்பியது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலையில் சாத்தியார் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.
11 கிராம கண்மாய்களுக்கு சாத்தியார் அணையில் இருந்து சுமார் 1500 ஏக்கர் நிலங்களுக்கு 25 கன அடி வீதம் இன்று காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணைக்கு சுமார் 340 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதில் செயற்பொறியாளர் அன்பு செல்வன், உதவி பொறியாளர் ராஜ்குமார், மாயகிருஷ்ணன், பாசன ஆய்வாளர் தியாகராஜன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அவைத்தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், விவசாய அணி நடராஜன், செயல் அலுவலர் தேவி, வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயசந்திரன், பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ராம கவுண்டன்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்சை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், சாத்தியார் அணை கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் அணையை முழுவதுமாக தூர்வாரி சிறு மலை குன்றுகளை அகற்றி அணையை விரிவுபடுத்தி அதிக அளவில் தண்ணீர் தேக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.