என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி
- மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
- அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது
மதுரை
மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.
இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்