என் மலர்
உள்ளூர் செய்திகள்
இயல்பு நிலைக்கு திரும்பிய மாமல்லபுரம்: பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது
- இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது.
- பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ளப்பெருக்கு அபாயம்.
மாமல்லபுரம்:
ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இருந்தே காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் கடற்கரை கோயில் வடபகுதி கடற்கரை ஓரம் உள்ள கூறை உணவகம் ஒன்று சரிந்து விழுந்தது அதிஷ்டவசமாக ஊழியர்கள் அங்கு தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
பூஞ்சேரி, பொதுப்பணித்துறை சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம், வெண்புருஷம், தேவநேரி, தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு படை, பேரிடர் மீட்பு படை, பேரூராட்சி ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அண்ணாநகர், சூளைமேடு, எடையூர், வடக்கு மாமல்லபுரம், பகுதி குடியிருப்புகள் அருகே மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
இன்று காலை காற்றும், மழையும் இன்றி இயல்பு நிலை திரும்பி உள்ளதால், வழக்கம் போல் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு சென்னை மாநகர, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக மரங்கள் விழுந்து உள்ளதால் பாண்டிச்சேரி வழியாக சென்னை வரும் வாகனங்கள் தற்போது குறைந்த அளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் நகர வீதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து குப்பைக் காடாக கிடந்த பகுதிகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். காலையில் குடிநீர் தடை வராமல் இருக்க ஜெனரேட்டர் வைத்து குடிநீர் மோட்டார்கள் இயக்கப்பட்டது.
சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால் விடுமுறை நாளான இன்று மாமல்லபுரத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.