என் மலர்
மயிலாடுதுறை
- கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
சீர்காழி:
சீர்காழி தேர் மேல வீதியின் சாலை ஓரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை யாரும் கொலை செய்து இங்கு வந்து போட் டார்களா அல்லது அவர் வந்த இடத்தில் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
- என்.எல்.சி. வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.
- குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.
அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மார்கோனி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
நீர் முறையாக வராததால் கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும்.
என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்களை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர்.
- திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன், கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெண்கள் வரிசையாக அமர்ந்து குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.
- குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். எழுத்தர் சரத் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-
துர்காமதி : மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் சரவணன்: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஏற்கனவே 84 ஆயிரம் செலவில் அப்பகுதியல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது.
விஜயகுமார்: தில்லைவிடங்கன், புதுதுறை, வெள்ளபள்ளம் ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே புதுத்துறை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ரிமா: அகணி ஊராட்சியில் வி.ஏ.ஓ அலுவலகம், பகுதி நேர அங்காடிக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.
ஜான்சிராணி: நகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஆனந்தி: கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜ்: நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.
வள்ளி: பெருந்தோட்டம் ஊராட்சியில் நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய போர் அமைத்து நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது,
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறைபாடுகள் இன்றி துரிதமாக நடைபெற்று வருகிறது . கவுன்சிலர்கள் கேட்கும் பணிகள் ஒவ்வொன்றாக பொது நிதிக்கு ஏற்றவாறு செய்து தரப்படும் என்றார்.
- ஆடி மாதம் அனுசம் நட்சத்திரத்தன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- கண்ணகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் சீர்கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனுசம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 51 ஆம் ஆண்டு கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடும் சிலம்புபொழிவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்பு கண்ணகி பெருமாட்டிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சல், உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நகரத்தார்கள், பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
- பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின.
- 3 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் கொத்து மரம் இருந்துள்ளது.
இதனிடையே நேற்று மதியம் மூக்கில் மரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.
இதனை அடுத்து அங்கிருந்த குடிசை வீடுகளில் தீ பரவியதை தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிய தொடங்கின.
தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் இரண்டு வாக னங்களில் தீயினை அனை க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின.
இதில் ஜெயராஜ், சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா, செல்லக்கிளி ஆகியவரின் வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. குறிப்பாக சாந்தி என்பவருது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
- சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
- மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.
இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் படம் வரைந்தனர்.
- அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி மரியாதை செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத்த லைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளை யொட்டி 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் ஒருவருக்கு ஒரு அடி வீதம் கொண்ட சாட் அட்டை காகிதத்தில் அப்துல்கலாமின் உருவபடத்தின் பல்வேறு பகுதிகளை தனித்தனியே வரைந்து வண்ணமிட்டு அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து 100 அடி அளவில் பெரிய அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
நிகழ்வில் பள்ளி தாளாளர் சி.பி.சிவசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞானசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தரங்கம்பாடி:
மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், மாவட்ட பொருப்பாளர்கள் மூங்கில் ராமலிங்கம், இனிப்பகம் நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, நகர தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
- 5 வகையான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்கள் உள்ளது.
- இ-சேவை மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள், வங்கி கடன் மானிய விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட 5 வகை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அருகே உள்ள இ-சேவை மற்றும் https://tnesevai.in.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.