என் மலர்
உள்ளூர் செய்திகள்
அத்தனூர்பட்டி அம்மன் கோவிலில் முப்பூஜை திருவிழா
- அத்தனூர்பட்டி கிராமத்தில், நேற்று பச்சியம்மன், பச்சியாயி, பெரியாண்டிச்சி ஆகிய 3 அம்மனுக்கும், முனியப்பன் சாமிக்கும் ஒரே நேரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெற்றது.
- 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியாக, பெரியாண்டிச்சி அம்மன், பச்சியம்மன், பேச்சியம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பனார், மதுரைவீரன் உள்ளிட்ட குலதெய்வங்களுக்கு ஆண்டு தோறும், ஆட்டுக்கிடா, சேவல், பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அத்தனூர்பட்டி கிராமத்தில், நேற்று பச்சியம்மன், பச்சியாயி, பெரியாண்டிச்சி ஆகிய 3 அம்மனுக்கும், முனியப்பன் சாமிக்கும் ஒரே நேரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெற்றது. பெண்கள் பாரம்பரிய முறைப்படி மூங்கில் கூடைகளில் பூஜைப் பொருட்களை சுமந்தபடி பம்பை மேளத்தோடு சாமியாடிபடி சென்றனர். இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் சன்னதியில் பொங்கலிட்டு பலியிட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி இறைச்சியை சமைத்து, உறவினர்கள் நண்பர்களுக்கு விருந்து வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.
கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால், ஏராளமானோர் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்தியும், பெயர்சூட்டியும் மகிழ்ந்தனர்.
விழாவிற்காக ஏற்பாடுகளை, தோது, பட்டிக்காரர் ராமசாமி, பால்காரர் ஆறுமுகம், பெருமாள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உழவன் முருகன், சாந்தி கந்தன் மற்றும் ஆசிரியர் குருநாதன், கைலாசம், சடையன் ஆகியோர் செய்திருந்தனர்.