என் மலர்
உள்ளூர் செய்திகள்
அத்தனுார்பட்டி மல்லன்மல்லி கோவிலில் முப்பூஜை வழிபாடு
- வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குல தெய்வமாக விளங்கி வரும் பழமையான மல்லன் மல்லி கோவில் அமைந்துள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து முப்பூஜை வழிபாடு நடத்தினர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் பழமையான மல்லன் மல்லி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வேறெங்கும் இல்லாத மல்லன் மல்லி மற்றும் அடக்குப்பூச்சி ஆகிய பெயர்களைக் கொண்ட தெய்வங்கள் மூலவராக அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் 4 ஆண்டுக்கு பிறகு ஒன்றுகூடிய குல தெய்வ பங்காளிகள், நேற்று 100-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து முப்பூஜை வழிபாடு நடத்தினர். முன்னதாக, 500 -க்கும் மேற்பட்ட மூங்கில் கூடைகளில் பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு, சாமியாடியபடி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் காண்போரை பரவசப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. முப்பூஜை வழிபாடு முடிந்ததும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து அசைவ விருந்து வைத்து உபசரித்தனர்.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் நல்லசேவி வகையறா குல தெய்வ பங்காளிகள் ஒன்றிணைந்து ஐயனாரப்பன், செல்லியம்மன், கருப்பனார், முனியப்பன், பெரியாண்டிச்சி சுவாமிகளுக்கு முப்பூஜை வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.