என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதியில் திடீர் மழை சூறாவளி காற்றால் 7 மின்கம்பங்கள் சாய்ந்தது
- பரமத்திவேலூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
- சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், இருக்கூர், கோப்பணம் பாளையம், தி.கவுண்டம் பாளையம், சிறுநல்லிக்கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, ஜமீன்இளம் பள்ளி, பெருங்குறிச்சி, மணியனூர், நல்லூர், கந்தம்பாளையம் கூடச்சேரி, பில்லூர், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்களும் நனைந்தபடியே சென்றனர்.
கடந்த 2 மாதத்திற்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெப்ப காற்று வீசி வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கிராமப் பகுதிகளில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 மின்கம்பங்கள் சேதம்
இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையின் போது நல்லூர், கந்தம்பாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மாரியம்மன் கோவில் மற்றும் ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள 7 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.
இந்த சூறாவளி காற்றால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.