என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் உமா கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட காட்சி.
மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நல உதவிகள்

- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 296 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டதற்காக, நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மற்றும் பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர்களுக்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கான கிரீன் சாம்பியன் விருதினை கலெக்டர் வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95 ஆயிரத்து 580 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்ட அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ மணிமேகலை, டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குநர் சிவக்குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி சப்-கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.