என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய விருது பெற்ற கிராமிய பாடகி நஞ்சம்மாளுக்கு பாரம்பரிய இசை முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்

- நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.
- அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை:
கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இசைக்குழுவில் கிராமிய பாடகராக இணைந்து பல இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்இந்த நிலையில் அய்யப்பனும், கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தை எடுக்க அட்டப்பாடிக்கு இயக்குனர் சச்சி வந்தார். அப்போது அவர் தன்னுடைய படத்தின் கிராமிய பாடல் ஒன்றை பாடுவதற்கு ஒருவரை தேடி உள்ளார்.
அப்போது தான் அவர் நஞ்சம்மாளை சந்தித்து அவரின் குரல் நன்றாக இருக்கவே அவரை தனது படத்தில் பாட வைத்துள்ளார். படம் வெளியாகி நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.
இதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில விருதை பெற்றார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சம்மாளை சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்துள்ளது.
இந்த தகவல் வெளியானது முதல் அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் இந்த விருதினை பெற்ற நஞ்சம்மாளுக்கு பழங்குடியின குழந்தைகள் படிக்க கூடிய அப்துல்கலாம் ஆதிவாசிகள் உண்டு உறைவிட பள்ளி சார்பில் பாரம்பரிய இசை கருவிகள் முழங்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.விருது குறித்து நஞ்சம்மா பேசியதாவது:-
விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதனை இயக்குனர் சட்சிக்கும், பழங்குடியினர் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா மக்களுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு விருது கிடைக்க காரணமாக அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.
நான் யாருன்னு தெரியாதப்ப, கண்டிப்பாக நீ எல்லோருக்கும், தெரிவேன்னு,சொன்ன இயக்குநர் சச்சி சரோட வாக்கு பலித்திருக்கிறது. அவர் எனக்கு கடவுள். இந்த மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தவர், அவர் இருந்து பார்க்க வேண்டியது, மறைந்துவிட்டார். அவர் என்னுள்ளே இருக்கிறார். இந்த விருதை வைத்து,அவராகவே பார்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விருதை பழங்குடி இனத்தை சேர்ந்த கிராமிய பாடல் பாடக்கூடிய நஞ்சம்மாள் பெற்றதன் மூலம் தங்களுடைய பாரம்பரிய கலை உயிர்ப்புடன் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வா–ய்ப்பாக அமைந்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறினார்.