என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்ப பயிலரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம்

- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது.
- தமிழகம் முழுவதிலும் இருந்து 72-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'சாக்கோசியம்-2023' என்ற தலைப்பில் 21-வது தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கட்டிட துறை பேராசிரியர் தனகர் வரவேற்று பேசினார்.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த தமிழ்நாடு ஸ்டார்ட் அப், இன்னோவேஷன் மிஷன், நான் முதல்வன் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்கள் தங்களது புதுமையான யோசனைகள், கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். ஊக்கமுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'' என்றார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 72-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, 2-வது பரிசாக ரூ.1,500, 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி கணினித்துறை பேராசிரியர் துளசிமணி, மின் மின்னணு துறை பேராசிரியர் தங்கராஜ், எந்திரவியல் துறை பேராசிரியர் ஆனந்தகுமார், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி பேராசிரியர் கிரேசியா நிர்மலா ராணி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் நாராயணன் பிரசாந்த் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
ஆதித்தனார் கல்வி அறநிலைய செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார். பயிலரங்கத்தின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நினைவு மலரை நெல்லை அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் வெளியிட, அதனை ஆதித்தனார் கல்வி அறநிலைய செயலாளர் நாராயணராஜன் பெற்று கொண்டார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சித்ராதேவி நன்றி கூறினார்.