என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி காயத்ரி (வயது 24) இவர் இன்று காலை விளாம்பாவூரிலிருந்து காட்டு மயிலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுமயிலூரிலிருந்து வேப்பூருக்கு சென்றார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற காயத்ரி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றார். அப்போது காயத்ரி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இது குறித்து காயத்ரி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமராவை ஆராய்ந்து செயினை பறித்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றார்.