என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூரில் 28-ந் தேதி உண்ணாவிரதம்- கடையடைப்பு போராட்டம்

- கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
- சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது. மேலும் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்யகோரியும் 6 ஊராட்சி மக்கள், விவசாயிகள், நமது நிலம் நமேத என்ற அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ந் தேதி நமது நிலம் நமதே போராட்ட குழு சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அன்னூரில் சிப்காட் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அரசுக்கு எங்கள் கோரிக்கைளை எடுத்துரைக்கும் விதமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) ஓதிமலை சாலையில் அமைந்துள்ள அண்ணா திடலில் ஒரு நாள் மட்டும் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளான விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.