என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் தொடரும் ஆன்லைன் மோசடி
- ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் போலீசில் புகார்
- கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 29). இவர் நெட் வொர்க் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த 8-ந்தேதி எனது வாட்ஸ் ஆப்க்கு தேவிகா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் யூடியூபர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் அவர்களுக்கு சந்தாதாரர்களை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் டெலிகிராமில் தனது விளம்பர வீடியோக்களை பார்த்து, அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பினால் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மை என நம்பிய நானும் விளம்பர வீடியோ பார்த்தேன். பின்னர் ரூ.150 முதலீடு செய்ய சொன்னார். நானும் பணம் அனுப்பினேன். அதில் எனக்கு சிறிது பணம் வந்தது. பின்னர் எனது வங்கி கணக்கில் இருந்து தவணை முறையில் பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து இரு நூறு அனுப்பினேன். ஆனால் எனக்கு கமிஷன் எதுவும் கிடைக்கவில்லை. பணத்தை பெறுவதற்காக நான் அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அந்த நபர் சரிவர பதில் அளிக்கவில்லை. எனவே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.