search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர்பேட்டை சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26- ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பெண் பக்தர்கள் தீ வாரிப்போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சாப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×