என் மலர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு
- நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன.
சங்கரன்கோவில்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 3.6.2022 முதல் ஒவ்வொரு மாதமும் சங்கரன்கோவில் நகராட்சியில் 2 மற்றும் 4-வது வாரங்களில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. இது தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
நகராட்சி பகுதிகள்
இத்திட்டத்தின்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வ லர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்ககமாக பங்கேற்க செய்து நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அப்பகுதியில் குப்பைகள் போடாத வண்ணம் அப்பகுதியினை மரம், அழகு செடிகள் நட்டு பராமரித்தல், பொது இடங்களில் உள்ள சுவர்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டாத வண்ணம் அப்புறப்படுத்தி சுவர்களில் மக்களை கவரும் வண்ணம் விழிப்புணர்வு ஓவியம் வரைதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடு ளை அப்புறப்படுத்தி அதே பகுதியில் மீண்டும் கொட்டா வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுவரொட்டிகள் அகற்றம்
நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள். பொதுமக்கள், வணிகர்கள், தொண்டு நிறுவனம் ஆகியோரை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டனர்.
மேலும் ஒவ்வொரு வார்டிலும் தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இதனால் தற்போது நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது நகரப்பகுதிகள் அழகுற ஜொலிக்கின்றன. பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக தற்போது நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் சுத்தமாக காணப்படுகிறது.
இப்பணியில் தினந்தோறும் ஈடுபடும் நகராட்சி மற்றும் தனியார் தூய்மை சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினர். இப்பணியில் நகராட்சியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் தொடர்ந்து பொதுமக்கள் இயக்கமாக இத்திட்டத்தினை மாற்றி நகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பணிகளை நகராட்சி கமிஷனர் சபாநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.