என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீடு விற்பது தொடர்பான பிரச்சினை: இளம்பெண்னை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
- வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார்.
- வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை தாக்கியுள்ளார்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்துள்ள கீரனூர் அக்கரைதோப்பு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார்.
இதனால் தேவி, அவரது மகள்கள் மற்றும் ராமமூர்த்தியின் தகப்பனார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்கிரி ராஜா (35) என்பவருக்கு வீட்டை விற்பதாக கூறி தேவி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலி செய்யும்படி பக்கிரி ராஜா தேவியிடம் கேட்டுள்ளார்.
அதோடு மட்டுமின்றி, பக்கிரி ராஜா நேற்று நள்ளிரவு தேவி வீட்டிற்கு சென்று, வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பேரளம் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பக்கிரி ராஜாவை கைது செய்தனர்.
நள்ளிரவு பெண்ணை உலக்கையால் தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.