என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெரியநாயக்கன்பாளையம்,ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
- வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.
கோவை,
கோவை மாவட்டம், பெரியநாயக்க ன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினையும் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் பெரியநாய க்கன்பாளையம் சந்திப்பு வழியாக மேம்பாலம் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பாலம் 1,850 மீ நீளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பித்து எல்.எம்.டபியூ. சந்திப்பு, பெரியநாயக்க ன்பாளையம் சந்திப்பு, வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தினால் 3 சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 84 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.
மேலும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. தேசிய நெடுஞ்சாலை எண் .67 ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ஜான் பாஸ்கோ சர்ச்சில் ஆரம்பித்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, கோவை வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது. இந்த பாலத்தினால் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 75 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.
பெரியநாய க்கன்பாளையம் பாலம், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நம்பர் 4 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி கற்றல் திறன் குறித்து பார்வையிட்டார்.
மேலும், வளம் மீட்பு பூங்காவில் வேளாண் சார்ந்த கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் பணியினையும், நாயக்கன்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரப்பு அமைக்கும் பணியும் மற்றும் நாயக்கன் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பெரியநா யக்கன்பாளையம் டவுன் கூட்டுறவு நுகர் பொருள் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குச்சி பாளையத்தில் கரிசல் மகளிர் அங்கக வேளாண் குழுவினர் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை உரங்களை தானாகவே தயாரித்து வருகின்றனர்.
இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் விதமாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியிலுள்ள பயிரிட்டுள்ள தென்னை, பாக்கு, வாழை, வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனிருந்தனர்.