என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு பகுதியில் கோவிலை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு
- நல்ல மாடன் கோவில் சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வயல் பகுதியில் உள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா நடத்தவில்லை.
நெல்லை:
தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் பிரசாத் மற்றும் தச்சநல்லூர் மேல ஊருடையார்புரம் பகுதி மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம், ராமையன்பட்டி, சிந்துபூந்துறை, நதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்தமான குலதெய்வமான நல்ல மாடன் கோவில் சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வயல் பகுதியில் உள்ளது. பல தலைமுறைகளாக நாங்கள் அங்கு ஆடு, கோழி பலியிட்டு கொடை விழா நடத்திவரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழா நடத்தவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சுற்றி குடியிருப்புகளாக மாற்றியுள்ளனர். தற்போது நாங்கள் கோவிலுக்கு வழிபட சென்றால் எங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டுகின்றனர். மேலும் எங்களிடம் அனுமதி பெறாமல் எங்கள் கோவில் இடத்திலேயே விநாயகர் சிலையையும் வைத்துள்ளனர்.எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோவிலை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.