என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்.
பாவூர்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மறியல்
- சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
- கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் கடப்பொகத்தி பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் கீழப்பாவூர் யூனியன் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக புதிய சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் மாரியப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் பிரிவு தலைவர் கணபதி, மாவட்ட ராணுவ பிரிவு துணைத் தலைவர் சுரேஷ், இளைஞரணி துணைத்தலைவர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த 45 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.