என் மலர்
உள்ளூர் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் செயல்படும் மதுக்கடையால் பொதுமக்கள் அவதி
- வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
- மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு, ஜெம்நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. குடியிருப்பு பகுதி அருகே செயல்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதே இடத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
போதை வாலிபர்கள் அடிக்கடி மதுக்கடை அருகே மோதலில் ஈடுபட்டு வருவதால் அவ்வழியே செல்லவே அப்பகுதி மக்கள், பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களையும் ஆங்காங்கே வீசி சென்று விடுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெம்நகரில் குடியிருப்புகளுக்கு அருகேயே மதுக்கடை உள்ளது. இதனால் தினந்தோறும் குடிமகன்களின் அட்டகாசத்தால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பான சூழல் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.