என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீடுகளில் மழை நீர் புகுந்தது: இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் சாலை மறியல்
- பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பேச்சு வார்த்தை ஒத்துவராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ளது பரசனேரி. இங்கு கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரப்பி காணப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து நீர் செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் கால்வாய் முழுவதும் மண்ணை கொட்டி அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதனால் ஏரியில் இருந்து நீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அண்ணா நகரில் வசிக்கும் மக்கள் வீடுகளில் சுமார் ஆறு அடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும் நேற்று அப்பகுதியில் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்த நிலையில் அவரின் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சு வார்த்தை ஒத்துவராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் ஆக்கிர மிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஜே.சி.பி கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ள மண்ணை அகற்றி உபரி நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உபரி நீர் வெளியேற வழி செய்ததால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஊத்தங்கரை- திருப்பத்தூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.