என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்றவர்கள்.
மகாசிவராத்திரி: திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி

- மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.
சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.