search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை பண்ணையில்   பராமரிப்பின்றி காணப்படும் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை
    X

    கால்நடை பண்ணையில் பணி புரியும் ஊழியர்களுக்கு, கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளை முட்புதற்கள் சூழ்ந்திருப்பதை படத்தில் காணலாம்.  

    கால்நடை பண்ணையில் பராமரிப்பின்றி காணப்படும் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை

    • முறையாக பராமரிக்கப்படாததால், பாழடைந்து காணப்படுகிறது.
    • பண்ணைக்குள் உள்ள ஏராளமான பொருள்களும் அவ்வப்போது திருடு போய் வருகின்றன.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய சுமார் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கால்நடைப் பண்ணை உள்ளது. இந்த கால்நடை பண்ணையில் மாடுகள், குதிரைகள் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இது தவிர இந்த கால்நடை பண்ணை வளாகத்தில் கோழிப் பண்ணை, உயர்வகை மாட்டு இனங்களான சிந்து, காங்கேயம் உள்ளிட்ட மாடுகளின் உறை விந்து சேகரிக்கும் பகுதியும், கோழியின ஆராய்ச்சி பல்கலைக்கழகம், மாவட்ட வனத்துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்த கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், பண்ணை பராமரிப்பு பணியாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய்யும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குடும்பத்துடன் தங்க குடியிருப்புகள் கட்டப்பட்டு, கடந்த 1964 -ஆம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அப்போதைய கால்நடைத்துறை மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் திறந்து வைத்து, ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குடியிருப்புகள் அனைத்தும் தற்போதும் நல்ல நிலையில் இருந்தாலும், முறையாக பராமரிக்கப்படாததால், அவை பாழடைந்து காணப்படுகிறது. அங்குள்ள பழமை வாய்ந்த ஆங்கிலேயர் கால கிறிஸ்தவ தேவாலயம் அருகே உள்ள இந்த குடியிருப்புகள் புதர் மண்டி, செடி கொடிகள் சூழ்ந்தும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தங்கி இருக்கும் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது. ஒட்டடைகள் சூழ்ந்து அப்பகுதி வழியே யாரும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தேவாலயம், பயன்பாட்டில் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால், அதன் பின்னர் கட்டப்பட்ட குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாததால் பாழடைந்துள்ளது. இதற்கு, அதிகாரிகளில் மெத்தன போக்கு தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. கால்நடை பண்ணையில் ஒரு சில இடங்களை மட்டுமே அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

    இந்த கால்நடை பண்ணையில் வேலிகள் இல்லாததால், விலை உயர்ந்த மரங்கள், பழமையான இயந்திரங்கள் மற்றும் பண்ணைக்குள் உள்ள ஏராளமான பொருள்களும் அவ்வப்போது திருடு போய் வருகின்றன. இதற்கும் இங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் மெத்தன போக்கே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குடியிருப்புகளை சீரமைத்து, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ,தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×