என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்நிலைய பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்.
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

- பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் உள்ள 2 நுழைவாயில் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது.
- அந்த சாலையில் 24 மணி நேரமும் ஓடும் கழிவுநீரை, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பயணிகள் மிதித்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது காமராஜர் பஸ் நிலையம். திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர் ஆகிய முக்கிய தொழில் மாநகரங்களை இணைக்க கூடிய சந்திப்பாக திண்டுக்கல் இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களும் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுகாதாரம் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சிறுநீர் கழிப்பிடங்களை சுத்தப்படுத்துவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அச்சத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் உள்ள 2 நுழைவாயில் பகுதியிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி அந்த பகுதியை கடந்து வருகின்றனர். சாலையில் 24 மணி நேரமும் ஓடும் கழிவுநீரை, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பயணிகள் மிதித்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் தவித்து வருவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த வெளி கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.