என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாலையோர வியாபாரிகள் அதிகாரிகளிடம் முறையீடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முன்னிலையில் நடந்த கூட்டம்
- கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் படகு இல்லம் அருகில் 40 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அந்த இடத்தில கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுக்கவும் என்று கூறினார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு படகு இல்ல சாலை மற்றும் அண்ணா பூங்கா சாலை ஓரத்தில் உள்ளூர் பொதுமக்கள் சிலர் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த கடைகள் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் ஏரியின் அழகை மறைக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆக்கிரமைப்புகளை ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றினர்.
அதன் பின்பு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஏற்காடு கோடை விழாவுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு தலைமையில் சாலையோர வியாபாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
கடைகள் நடத்த உத்தரவு
அதில் ஊராட்சிக்கு சொந்தமான கடைகள் குத்தகைக்கு விடப்படும் அந்த கடைகளை எடுத்துக் கொள்ளவும் என்றும் அங்கு கடை கிடைக்காதவர்களுக்கு அவரவர்கள் கடை நடத்தி வந்த சாலை ஓரத்தில் குறிப்பிட்ட அளவிற்கு இடம் ஒதுக்கி தரப்படும் என்றும் அந்த இடத்திற்கு அரசுக்கு வாடகை செலுத்தி கடை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி தராததால் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டு சேலம் கலெக்டரிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் முருகன் தலைமையில் வட்டாட்சியர் விஸ்வநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் படகு இல்லம் அருகில் 40 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுக்கவும் என்று கூறினார்.
ஆனால் வியாபாரிகள் சிலர் அண்ணா பூங்கா சாலையில் தான் இடம் வேண்டும் என்று கூறினார். அப்போது நெடுஞ்சாலை துறையினர் அங்கு நடை பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் அதனால் அங்கு கடைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் மறுத்துவிட்டது.
அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடத்தில கடை வைத்துக்கொள்வது குறித்து பதிலளிக்க ஒரு வரம் அவகாசம் வழங்கியுள்ளது. கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.